ட்ரம்ப் மற்றும் மோடி இடையே மதிப்புமிக்க உறவு இருப்பதால் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் சிக்கல் எழாது என அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா அரசு விதித்துள்ள 25 விழுக்காடு வரிவிதிப்பு அமலுக்கு வந்திருப்பதால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த அதீத வரியால் இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இரு நாடுகளுக்கு இடையே உறவு எப்படி இருக்கும்? என்பது குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
இந்தியா, அமெரிக்கா வர்த்தக கருத்து மோதல் தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் அளித்துள்ள பேட்டியில், வர்த்தக விவகாரத்தில் இந்தியாவோடுதான் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கிடையில் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் எழுந்ததால் வரிவிதிப்பு தொடர்பான சிக்கல்கள் எழுந்ததைக் குறிப்பிட்ட பெஸன்ட், இருதரப்பு உறவில் பல அடுக்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விரைவில் இந்த அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவும் ஒருங்கிணைந்து பயணிக்கும் எனவும் பெஸன்ட் நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..