masoud pezeshkian ANI
உலகம்

ட்ரம்ப் தந்த அழுத்தம்..? நெருக்கடி கொடுத்த அர்ஜென்டினா.. பதுங்கிப் பாய்ந்த ஈரான்!

அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

1994-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள யூத சமூக மையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு ஹிஸ்புல்லாதான் காரணம் என்று அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இந்தத் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அர்ஜென்டினா வரலாற்றில் மிக மோசமான குண்டுவெடிப்பாக இது கருதப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் ஈரானின் IRGC அமைப்பை அர்ஜென்டினா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இதன் பின்னணியில் ட்ரம்பின் அழுத்தம் காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

Argentina - Hezbollah attack

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அர்ஜென்டினாவின் விமானப்படை மற்றும் கடற்படை பயங்கரவாத அமைப்புகளாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளது. பரஸ்பர நடவடிக்கை என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Argentina Air force

மேலும், இந்த நடவடிக்கையால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அர்ஜென்டினா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஆனால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படையை மட்டுமே ஈரான் குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டின் தரைப்படை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.