டொனால்ட் ட்ரம்ப் புதியதலைமுறை
உலகம்

வந்த உடனேயே ட்ரம்ப் பிறபித்த உத்தரவு.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தலையில் விழும் இடி!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவுகள் அங்குள்ள இந்தியர்களையும் இங்குள்ள இந்தியர்களையும் எப்படி பாதிக்கும். விரிவாக பார்க்கலாம்.

PT WEB

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவுகள் அங்குள்ள இந்தியர்களையும் இங்குள்ள இந்தியர்களையும் எப்படி பாதிக்கும். விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் பிறக்கும் எந்த குழந்தையும் குடிமகன் அந்தஸ்தை பெறும் என்ற விதியை நீக்கியுள்ளார் ட்ரம்ப். பெற்றோரில் ஏதேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது கிரீன் கார்டு பெற்றிருந்தால் மட்டுமே அக்குழந்தை அமெரிக்க குடிமகனாக அங்கீகரிக்கப்படும் என்பது ட்ரம்ப்பின் புதிய உத்தரவு.

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் பிறந்தாலே அந்நாட்டு குடிமகன் என்ற சலுகை நீக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகப்பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளவே பலர் அமெரிக்காவிற்கு சென்று குழந்தை பெற்ற நிலையும் இருந்தது. மறுபுறம் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இது போன்ற சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த விதியால் மெக்சிகோ, சல்வடார் நாட்டு மக்களுக்கு அடுத்து இந்தியர்கள்தான் பாதிக்கப்பட உள்ளனர். இந்த சூழலில் இது போன்ற சட்ட விரோதமாக தங்கியுள்ள அடையாளம் காணப்பட்ட 18,000 இந்தியர்களை திரும்பப்பெறுவது குறித்து ட்ரம்ப் அரசுடன் இந்திய அரசு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் H1B உள்ளிட்ட விசாக்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் அதுவும் அமெரிக்க வேலை கனவில் உள்ள இந்தியர்களை பாதிக்கும். இது தவிர சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக மாற்று பணத்தை பயன்படுத்தினால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அமெரிக்காவை சார்ந்துள்ள இந்திய ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.