பாகர் காலிபாப் - போப் 14-ம் லியோ - ட்ரம்ப் X
உலகம்

ட்ரம்ப் - போப் மோதல் | “இந்த ஒளிக்கு நன்றி” - போப் ஆண்டவருக்கு ஈரான் ஆதரவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14-ம் லியோ ஆகியோருக்கு இடையே நிலவி வரும் மோதலில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் போப் ஆண்டவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Premkumar S

உலக நாடுகள், உள்ளூர் மக்கள் என யாரையும் விட்டுவைக்காது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், மீண்டும் அரியணை ஏறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பழி வாங்கப்போவதாக தெரிவித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து நடந்து வந்தன.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்

போரின் முக்கியப் பகுதியாக உலகின் 20 சதவீத எரிவாயு வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடியாது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் போரின் காரணமாக ஈரானில் மட்டும் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்திருக்கிறது. இதனால், மத்தியக்கிழக்கில் போரின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இவ்வேளையில், ஈரான் போர் தொடர்பாக போர் ஆண்டவர் 14-ம் லியோக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இடையேயும் வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது. அதன்படி, போப் லியோ, ”ஆயுதங்களைக் கீழே போடுமாறும், போரினால் நாகரிகங்களை அழிக்கும் செயலை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார். பின்னர் தொடர்ந்து, “போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் கேட்பதில்லை. அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சர்வ வல்லமை படைத்தவர் என்ற அதிகாரம் காட்டுவதை நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள்” எனக் கூறியிருந்தார். போப், ட்ரம்பை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் அமெரிக்கத் தலைமையை நோக்கமாகக் கொண்டவையாக இருந்தன.

போப் லியோ, ட்ரம்ப்

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்ப் போப்பை கடுமையாக சாடி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,‘நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வாடிகனில் இருந்திருக்கமாட்டார். அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கியது தவறு என்று நினைக்கும் ஒரு போப் எனக்குத் தேவையில்லை. லியோ குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், போப் தீவிர இடதுசாரிகளுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்துவதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சூழலில் தான், போப் ஆண்டவரின் நிலைப்பாட்டைப் பாராட்டி ஈரான் சபாநாயகர் காலிபாப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ”இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை அவர் கண்டிக்கும்போது, ​​’எனக்கு அச்சமில்லை’ என்ற முழக்கம் எதிரொலிக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து மௌனம் காக்க மறுப்பவர்கள் அனைவருக்கும் இந்த முழக்கம் வழிகாட்டுகிறது. மேலும், இந்த ஒளிக்காகவும், லட்சக்கணக்கானோருக்கு உத்வேகம் அளித்ததற்காகவும் அமெரிக்காவில் பிறந்த போப்பாண்டவருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.