பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியை சேர்ந்த நபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பது இதுவே முதன்முறையாகும். 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடியுடனே அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக வரும் 28ஆம் தேதி தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார் மோடி.
இந்நிலையில் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், '' தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். மோடி எனது நண்பர்.
இந்தியாவுடன் அமெரிக்க ஒரு நல்ல நட்புறவில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பானில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
G20 மாநாடு ஜப்பானில் ஜூன் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.