உலகம்

துப்பாக்கிகளுடன் மிரட்டும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ? முடிவுகள் தொடர் இழுபறி !

துப்பாக்கிகளுடன் மிரட்டும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ? முடிவுகள் தொடர் இழுபறி !

jagadeesh

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு முன்பு கூடியுள்ள ட்ரம்ப் ஆதரவாளர்கள் துப்பாக்கியுடன் சுற்றி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜோ பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், டிரம்பிற்கு 47.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய நான்கு மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்தக் கோரி கோர்ட்டில் டிரம்ப் தொடந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், ஜார்ஜியா மாகாண அரசு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலர் அரிசோனா, மிச்சிகன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு முன்பு சிறு குழுக்களாக கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி சுற்றி வருகின்றனர். இதனால் சிறு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வெள்ளை மாளிகை முன்பும் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வெள்ளை மாளிகையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைதான் அதிபர் யார் என்று முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.