எல்லைகளில் ஊடுருவல்களை தடுக்க முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்க தான் யோசனை தெரிவித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
முறைகேடாக மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நாட்டினுள் நுழைவதை தடுக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும் என தேர்தலின் போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார். பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் அவர், எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் எல்லை வழியே நுழையும் அகதிகளை காலில் சுட வேண்டும் என ட்ரம்ப் யோசனை தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானது. ஊடுருவல்களை தடுக்க எல்லையில் முதலைகள், பாம்புகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகவும் செய்தி வெளியானது. இந்தத் தகவல் பொய்யானவை என மறுத்துள்ள ட்ரம்ப், தான் அப்படி கூறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.