Trump Web
உலகம்

அடித்து நொறுக்கப்படும் டிரம்பின் கணக்கு! போரில் களமிறங்கும் சீனா? ஈரானுக்கு குவியும் ஏவுகணைகள்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு தனது வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PT WEB

அமெரிக்கா- ஈரான் மோதல் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கட்டத்தை தாண்டி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

செய்தியாளர் - ஐடா அருட்செல்வி

சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் சுமந்து இயக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (MANPADS) முதல் தொகுப்பு இன்னும் சில வாரங்களுக்குள் ஈரானுக்கு அனுப்பப்படும் என்று, இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு தனது வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MANPADS

60 முதல் 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் உட்பட 300 முதல் 400 வரையிலான தோளில் சுமந்து இயக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஹாங்காங்கைச் சேர்ந்த Zhongqing Baoshang International Investment நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது சீன சப்ளையருக்கும் ஈரானுக்கும் இடையிலான இடைத்தரகராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல்களை சீன வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்குமாறு அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு ஈரான் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

MANPADS

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், விநியோக கால அட்டவணை, எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்ப கட்டமாக சீனாவின் உரும்கி நகரிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்த ஆயுதங்கள் ஈரானுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், இதுபோன்ற ஆயுதப் பரிமாற்றத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதுகுறித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் மறுத்துள்ளது.