கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கும் பெட்டினா ஆண்டர்சன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு, பஹாமாஸ் என்ற தனித்தீவில் இருவரும் தங்களது உறவினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியை வைத்திருந்தனர். இரு தினங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில், ட்ரம்ப், அவரது உறவினர்கள், நண்பர்கள், திருமணமான தம்பதியின் நெருங்கிய நண்பர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து அமெரிக்காவில் புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. பஹாமாஸ் தீவை வாடகைக்கு எடுத்தது உள்பட, வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்ய, அதாவது முழு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் பணம் செலவழித்ததாக ப்ரோபப்ளிகா என்ற அமெரிக்காவின் புலனாய்வு இதழ் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்திவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதும், கச்சா எண்ணெய் வாங்கும் அதன் நட்பு நாடுகள் மீது வரி விதிப்பதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கக் கூடிய ஒரு தொழிலதிபர், அமெரிக்க அதிபரின் மகன் திருமணத்துக்காக லட்சக்கணக்கான டாலர்களை செலவழித்திருப்பது அமெரிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை கோபமடையச் செய்திருக்கிறது.
உமர் கிரெம்லெவ் என்ற அந்த தொழிலதிபர், ரஷ்யாவின் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராகவும், அந்நாட்டில் பாதுகாப்புத் துறையுடனும் நெருங்கிய தொடர்புடையவராக இருந்து வருவதாக ப்ரோபப்ளிகா தெரிவிக்கிறது. இன்ஸ்டாவில் தங்களது திருமண கொண்டாட்டம் குறித்து பதிவிட்ட ட்ரம்பின் மகன் மற்றும் மருமகள் கூட, உமர் கிரெம்லெவ்க்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டனராம். இந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த தொழிலதிபர் தனது மகனுக்கு தெரிந்தவராகவோ அல்லது அவருடைய நண்பராகவோ இருந்திருக்கலாம்; அவரது பின்புலம் என்ன என்பதை இருவரும் சரிபார்த்திருக்க மாட்டார்கள் என்றும் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறாராம்.
இது தொடர்பாக சந்தேகம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சியினர், “உங்கள் திருமணத்துக்காக, உங்களின் 50 நண்பர்களின் கொண்டாட்டத்துக்காக லட்சக்கணக்கான டாலர்களை செலவழிக்கும் எண்ணம் அவருக்கு எப்படி வந்தது?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்தான், “நட்புக்கு அரசியல் நோக்கம் தேவையில்லை, தாராள மனப்பான்மை என்பது தானாக வரும். உள்நோக்கத்துடன் அல்ல!” என ட்ரம்பின் மகன் பதிவிட்டிருக்கிறார். அமைதியை விரும்பாத நாட்டில் இருந்து வரும் பொருட்கள் தேவையில்லை என பொருளாதார தடை விதித்த அமெரிக்க அதிபர், எப்படி தனது மகன் திருமணத்துக்கு அந்த நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து வரக்கூடிய பணத்தை மட்டும் ஏற்பார் என்ற கேள்வி அமெரிக்கர்களை வாட்டி வதைக்கிறதாம். ஒருவேளை ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏதேனும் டீலிங் இருக்குமோ?... அதற்கான லஞ்சம் தான் இதுவோ? என்றும் சிலர் பேசத் தொடங்கிவிட்டனர்.