அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது சந்திப்பு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, அடுத்த கட்டமாக இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார். இந்நிலையில் அணு ஆயுதத்தை கைவிடுவதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக இருவரும் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனாயில் சந்தித்து பேசவுள்ளனர்.
இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே தடையாக நிற்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடகொரியா மீதான சர்வதேச தடைகளை நீக்குமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சந்திப்புக்காக வரும் 25 ஆம் தேதியே கிம் ஜாங் உன் வியட்நாம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.