உலகம்

''ட்ரம்ப் ‌தவறு செய்ய மாட்டார்'' - துணை அதிபர் மைக் பென்ஸ்

''ட்ரம்ப் ‌தவறு செய்ய மாட்டார்'' - துணை அதிபர் மைக் பென்ஸ்

webteam

வடகொரியா விவகாரத்தில் கடந்த கால நிர்வாகம் செய்த தவறுகளை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நிச்சயம் செய்யாது என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வாக்குறுதி அளித்துள்ளார். 

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இருவரும் விரி‌வாக விவாதித்தனர்.

இதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிபர் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம், கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் புத்தாண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்தகால தவறுகளை அவர் (ட்ரம்ப்)  மீண்டும் செ‌ய்ய மாட்டார் என்றும் குறிப்பாக அணு ஆயுதங்களை கைவிடும் திட்டம் தொடர்பாக வெளியிட்ட வாக்குறுதிகளை ட்ரம்ப் மீறமாட்டார் என்றும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். அப்போது வடகொரிய விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.