அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக எரிபொருள் விற்பனை பாதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தால் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், நிரந்தர ஒப்பந்தம் இழுபறியில் உள்ளது. ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு உதவியாகவே இந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகவும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்றும் எச்சரிக்கிறார்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-தேதி தொடங்கிய போர் காரணமாக உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அதேசமயம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டுத்தாக்குதல் நடத்தி வந்த சூழலில் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்தப்போரின் காரணமாக இருதரப்புக்கும் கடும் சேதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, முழுமையான போர்நிறுத்த முன்மொழிவுகளை இருநாடுகளை சமர்ப்பித்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்து, தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அமெரிக்காவும், மற்றொரு தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், ஈரானின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக 90 சதவீத செறிவூட்டல் அமையக்கூடும் என ஈரானும் என மாறிமாறி எச்சரித்து வருகின்றன. இந்தசூழலில் தான், 3 நாள் அரசு முறைப்பயணமாக சீனா சென்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ஏர் ஃபோர்ஸ் ஒன் அமெரிக்கா திரும்பியிருக்கிறார்.
முன்னதாக, விமானத்தில் இருந்தபடியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தம் குறித்தும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உரையாடியது குறித்தும் பேசியிருக்கிறார். ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு நான் ஆதரித்திருக்க மாட்டேன். எனினும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்ட நிலையில், அந்த நாட்டிற்கு செய்யும் உதவியாகவே அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டேன். பாகிஸ்தான் பிரதமரும், அந்நாட்டு மக்களும் அற்புதமானவர்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்றும், தெஹ்ரான் பல ஆண்டுகளாகக் குவித்து வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், சீன அதிபர் ஷி ஜின் பிங்குடன் நடைபெற்ற உரையாடலை பகிர்ந்து கொள்ளும்போது, ”பெய்ஜிங்கில் உள்ள சோங்னான்ஹாய் தோட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருந்தபோது ஈரான் குறித்து விவாதித்தோம். இந்த விவகாரம் எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளோம். அவர்களிடம் அணு ஆயுதம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான ஜலசந்தி திறந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” எனத் தெரிவித்திருக்கிறார்.