உலகம்

”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு

webteam

சீனாவிலும், இந்தியாவிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால் அங்கும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,649 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,50,236 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,98,244 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,51,229 ஆக உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் பரிசோதனை செய்வதால் தான் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா 2 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளைச் செய்துள்ளது. அதனால் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. சீனாவிலும், இந்தியாவிலும் பரிசோதனைகளை அதிகரித்தால் அங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஜெர்மனியில் 40 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவில் 30 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சீனா தான் விரோதியே. அங்கிருந்து தான் கொரோனா பரவியது. அவர்கள் அங்கேயே அதனைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 40 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.