செய்தியாளர் - M. மீரா
நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகையாளர்கள் மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் ஆகியோரின் ‘ரெஜிம் சேஞ்ச்’ (Regime Change- Inside the Imperial Presidency of Donald Trump) என்ற புதிய புத்தகத்துக்காக டிரம்பை அவர்கள் நேர்காணல் செய்துள்ளனர். அப்போது உலக வரலாற்றில் உங்கள் (ட்ரம்ப்) இடம் என்ன என்று கேட்ட போது author Dave King எழுதிய இரண்டு பக்க வரலாற்று அறிக்கை ஒன்றை காட்டி, அதில் இருந்த மாவீரன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், சர்வாதிகாரியான ஹிட்லர், இடதுசாரிகளான ஸ்டாலின், மாவோ போன்றோரின் பெயர்களை வாசித்துக் காட்டிய ட்ரம்ப், அவர்கள் அனைவரையும் விடத் தான் தான் அதிக அதிகாரம் படைத்தவர் என வாதிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தமக்குள்ள அதிகாரத்துடன் ஒப்பிடுகையில், அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு தன்னைவிட பின்தங்கியிருந்தனர் என்பதையும் அப்பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் எழுதியுள்ள ட்ரம்ப் குறித்த இந்த விபரங்கள் கசிந்த சில மணி நேரங்களிலேயே, அதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
author Dave King எழுதிய வரலாற்று அறிக்கையின் சுருக்கத்தை அப்படியே பகிர்ந்து, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வரலாற்றில் சக்திவாய்ந்த மனிதர்கள் அனைவரும் மக்களைக் கொன்று குவித்து, பயத்தை ஏற்படுத்தியே ஆட்சியைத் தக்கவைத்தனர். ஆனால், தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்களைப் பயமுறுத்தாமல், தனது அசாத்தியமான ஆளுமை மற்றும் உலகின் மிகச் சிறந்த ராணுவ பலத்தின் மூலம் அவர்களை விட அதிகம் பேரை தன்வசப்படுத்தியுள்ளார் என எழுதப்பட்டிருந்தது. சர்வாதிகாரிகளுடன் தன்னை ஒப்பிடுவதை ட்ரம்ப் ரசித்து ஏற்பது இது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்சியோஸ்' (Axios) ஊடகத்துடனான நேர்காணலின்போது, ஈரான் விவகாரம் தொடர்பான சூழலில், தனது அதிகாரத்திற்கு எந்த வரம்புகளும் இல்லை (no limits) என்று கூறியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில், தாமதமாக வந்த ட்ரம்ப் உலகத் தலைவர்கள் முன்னிலையின் நான்தான் boss என்று தன்னைத்தானே கூறிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.