உலகம்

ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது - ட்ரம்ப்

webteam

அனுமதியின்றி வான்பரப்பில் பறந்த அமெரிக்க ட்ரோனை தாங்கள் சுட்டு‌வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்த நிலையில் 'ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது'' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் ஈரான் மீது முழுப் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் ஈரானுடன், வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகளுக்கும் தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்தார். இது ஈரான் - அமெரிக்கா அரசுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியது.  

அணுசக்தி ஒப்பந்த முறிவுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த மாதம் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீதும் எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்நிலையில் ஹார்மஸ்கான் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான உளவு பார்க்கும் ஆளில்லா விமானம் ஒன்று அனுமதியின்றி பறந்ததாகவும் அதனை தங்கள்‌‌ நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை அமெரிக்கா தற்போது உறுதி செய்துள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்