உலகம்

“மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” - ட்ரம்ப் மகள் இவாங்கா 

webteam

இந்திய பிரதமர் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, ட்ரம்பின் மகள் இவாங்கா கூறியுள்ளார். 

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ஒசாகா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒருவொருக்கொருவர் சந்தித்து ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்புத்துறை, 5ஜி சேவை, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து‌ ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அவரது மகள் இவாங்காவும் கலந்து கொண்டார். 

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று இவாங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான,5 ஜி தொழில்நுட்பம் தொடர்பான பேச்சும் பயனுள்ளதாக இருந்தது என்று இவாங்கா பதிவிட்டுள்ளார்.