இந்தியா–பாகிஸ்தான் மோதல் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் ராணுவ தலைமை இயக்குநர்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு–காஷ்மீரின் பகல்காம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பின்னால் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்கள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய எல்லைப் பாதை மூடப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.
இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் அமைந்திருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.இத்தகைய சூழலில் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை தான் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதனை இந்திய அரசு மறுத்து வருகிறது.. ஆனால் தற்போது இதற்கு புதிய விளக்கத்தை டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கு மிக அதிகமான வரிகளை விதிப்பேன் என்று எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளின் தலைவர்களும் கோபமடைந்ததாகவும், இறுதியில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டதாகக் கூறப்படும் தகவலை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா–பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை, இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையே நேரடியாக நடைபெற்றதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.