Donald trump x page
உலகம்

ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்புகள்.. வெளியிட அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

மிகவும் சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தகவல்கள் இந்த ரகசியக் கோப்புகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

PT WEB

வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் வேற்றுக்கிரக வாழ்க்கை தொடர்பான அரசின் ரகசிய கோப்புகளை பொதுவெளியில் வெளியிட அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் நீண்டகாலமாக எழுந்துவரும் நிலையில், மக்களிடையே அதிகரித்துள்ள ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Extraterrestrial Highway near Area 51 in Nevada

”வேற்றுக்கிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்களா” என்று அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”அவர்கள் உண்மையானவர்களா... இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தங்களது X தளத்தில் ”மக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வத்தைத் தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகள், வேற்றுக்கிரக வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் விமானங்கள் தொடர்பான அரசின் ரகசியக் கோப்புகளை அடையாளம் கண்டு, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, யூடியூபா் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது, ”வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான், ஆனால் நான் இதுவரை பாா்த்ததில்லை” எனத் தெரிவித்திருந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபா் ஒருவரே, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருந்தது, மேலும் உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியது.