அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை மாற்றங்களையும் கொள்கை முடிவுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பைடனின் அறிவாற்றல் குறைபாட்டை மறைக்கவும் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தவும் அவரது உதவியாளர்கள் ஆட்டோபென் கையொப்பங்களை பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தற்போது ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் சட்ட ஆலோசகர் PAM BONDI தலைமையில் விசாரணைக் குழுவையும் அமைத்து, பரந்த விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். பைடனின் மனநிலையைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட அரசியல் முடிவுகள் பற்றியும் பொதுமக்களை ஏமாற்ற யாராவது சதி செய்தார்களா என்பதை ஆராயவும் ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பது, அமெரிக்க அரசியலை அதிரவைத்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தானதும் கவலையளிக்கக் கூடியதுமான ஒரு அரசியல் சதி என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். யார் உண்மையில் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தியது என்பதற்கான உண்மை மறைக்கப்பட்டதாகவும், பைடனின் கையொப்பம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பைடன், பொதுமன்னிப்புகள், நிர்வாக ஆணைகள், சட்டங்களைப் பரிந்துரை செய்தல், அறிவிப்புகள் ஆகிய அனைத்தும் தன் தலைமையிலேயே நடந்ததாக கூறியுள்ளார்.
வேறு யாராவது அவற்றை செய்ததாக கூறுவது அபத்தமானது, பொய்யானது என்றும் பைடன் பதில் அளித்துள்ளார். பைடன் காலத்தில் வெளியான பல முக்கிய ஆணைகள் மற்றும் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமற்றவையாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒருவர் நேரில் கையொப்பமிடாத சூழ்நிலையில், அவருடைய முன் ஒப்புதலுடன் ஆவணங்களில் கையொப்பம் இடுவது ஆட்டோபென் எனப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும், சட்டரீதியான விளைவுகளை உருவாகக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.