அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் காரணமாக, அமெரிக்காவில் விலைவாசி உயர்வு அதிகரித்திருக்கிறது. இதனால், அமெரிக்கர்களுக்கு ட்ரம்பின் மீது குறிப்பிட்ட அளவில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, வரும் இடைக்காலத் தேர்தலில் அவரது குடியரசுக்கட்சி வெற்றி பெறுவது கடினம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச்சூழலில் தான், நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தால், ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Axios ஊடகம் வெளியிட்டுள்ள இந்தத் அறிக்கையின்படி, தேர்தலில் குடியரசுக் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தால், அரசியல் ரீதியாகத் தனக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பதிலடியாக, ட்ரம்ப் துணிச்சலான நடவடிக்கையில் இறங்கக்கூடும் என அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தத் தகவலை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் மறுத்ததாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவாக இருப்பதாகவும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஈரான் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக் காலத் தேர்தலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் மீண்டும் போர் தீவிரமடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.