அமெரிக்க சுற்று பயணத்தின் போது பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்பும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐநா பொதுசபையின் 74ஆவது கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி உரையாற்ற இருக்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு ஐநா பொது சபையில் மோடி முதன்முறையாக பேசுகிறார்.
சுமார் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிபர் ட்ரம்பும் மோடியுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயணத்தின் போது தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக பிரதமருக்கு பில்கேட்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் குளோபல் கோல்கீப்பர் (Global Goalkeeper) விருது வழங்கப்பட இருக்கிறது.