டொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பில் சில அம்சங்கள் சுவாரஸ்யமாக அமைந்தன.
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்தச் சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது. சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் முதன்முறையாக டொனால்ட் ட்ரம்பும் - கிம் ஜாங் உன்னும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது, உற்சாகமாக இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்தக் கைகுலுக்கல் 12 நொடிகள் நீடித்தது.
இதனை அடுத்து சில வார்த்தைகளை பேசிக் கொண்ட இருவரும், பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு சென்றனர். முதல் பேச்சுவார்த்தையின் போது மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே அவர்கள் உடனிருந்தனர். 48 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. கிம், பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு 7 நிமிடங்கள் முன்னதாகவே வந்ததாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இளையவர்தான் முதலில் வர வேண்டும் என்ற வடகொரிய கலாசாரமே முன் கூட்டிய வருகைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம்மை சந்தித்தபோது டொனால்ட் ட்ரம்ப் சிவப்பு நிற டை (TIE) அணிந்திருந்ததற்கும் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. வடகொரியர்களுக்கு மிகவும் பிடித்த நிறம் சிவப்பு என்பதால் ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்தாக சொல்லப்படுகிறது.