ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்பந்தம் விரைவில் வரும் என ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். சி.என்.என் தரவுப்படி குறைந்தது 37 முறை ‘இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம்’ என வலியுறுத்தியுள்ள அவர், பல்வேறு பேச்சுகள், சமூக ஊடகப் பதிவுகள் மூலம் ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியிருந்தாலும், நிஜத்தில் தாக்குதல்கள் தொடர்கின்றன.
செய்தியாளர்; M.மீரா
ஈரான் - அமெரிக்கா- இஸ்ரேல் போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும் ஒருபுறம் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் அறிவித்த ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து, பேச்சு வார்த்தைகள் குறித்து ஓர் ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவிருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். "பேச்சு வார்த்தை கடைசி கட்டத்தில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் எத்தனை முறை கூறியிருக்கிறார்? அவ்வாறு கூறியதால் ஏதேனும் பயன் இருந்ததா என்பது குறித்து இங்கே பார்க்கலாம் .
போர்நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தையும் சேர்த்து, ட்ரம்ப் குறைந்தது 37 முறையாவது ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவிருக்கிறது என்று கூறியுள்ளதாக சிஎன்என் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. சமூக ஊடகப் பதிவுகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஊடகங்களுடனான தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றின்மூலம், ஓர் ஒப்பந்தம் விரைவில் வரவிருப்பதாகவோ அல்லது அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவோ அவர் நேரடியாகக் கூறிய எண்ணிக்கை இதுவாகும். மார்ச் 23 அன்று, கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறினார் ட்ரம்ப் . (உண்மையில், ஈரான் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்தது.)
மார்ச் 24 அன்று ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் அவசரமாக இருக்கிறது என்றும் நாம் இதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று நினைக்கிறேன் என்றார். அடுத்து, மார்ச் 25-ஆம் தேதி, ’’ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறது என்ற நிலை உருவானது’’ என்றார். தொடர்ந்து மார்ச் 26 அன்று, ”ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள கெஞ்சியது” என்றார். மேலும் மார்ச் 29 அன்று, ”ஈரான் விவகாரத்தில் ஓர் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
ஏப்ரல் 6 அன்று, ஒரு பின்னடைவு ஏற்படுவதற்கு முன்பு தாங்கள் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருந்ததாக அவர் கூறினார். இறுதியில், ஏப்ரல் 8 அன்று போர்நிறுத்தத்தை அறிவித்தார், ட்ரம்ப். இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் வகையில், இது ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 15 அன்று, அவர் Fox Business ஊடகத்திடம், ”இது முடிவுக்கு வரப்போகிறது என்று நான் நினைக்கிறேன், இது முடிவை நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன்” என்றார். அவர்கள் (ஈரான்) ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார். ஏப்ரல் 16 அன்று, ஈரானுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது; அது ஒரு நல்ல ஒப்பந்தமாகவே அமையும்” என்றார். ஏப்ரல் 17-க்குள், ”மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஈரான் எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டுவிட்டது அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்கிறேன் மற்றும் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன்” என்றார். ஏப்ரல் 20 அன்று, 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்ட அவர், ”இவை அனைத்தும் மிக விரைவாகவே நடக்கப்போகின்றன” என்று கணித்தார்.
அவர் கூறிய எதுவுமே நடக்கவில்லை என்றாலும், ஏப்ரல் 30 அன்றும் ”ஈரான் ஒப்பந்தம் செய்யத் துடித்துக்கொண்டிருந்தது” என்றார். பின்பு மே 1 அன்று, ”போர் முடிவுக்கு வரும்போது அது வெகு காலம் எடுக்காது என்று நம்புகிறேன்” என்றார். அதன்பின்னர் சிறிது காலம் கழித்து மே 18 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, இராணுவத் தாக்குதல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அவர் தெரிவித்தார். ஏனெனில், ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் தாங்கள் இருப்பதாக அந்த நாடுகள் கருதுகின்றன என்பதே அதற்குக் காரணமாகும் என்றார்.
”ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் வந்துவிட்டதாக நாங்கள் நினைத்த காலங்கள் இருந்தன. ஆனால் அவை கைகூடவில்லை” என்று கூறிய ட்ரம்ப், அதன்பின்னர், ”ஆனால் இது சற்று வித்தியாசமானது” என்றும் குறிப்பிட்டார்.
மீண்டும் தளராமல் அந்தப் போரை நாங்கள் மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று மே 19 அன்று கூறினார். பின்பு மே23 அன்றும் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தங்கள் நிர்வாகம் பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுவிட்டது, இறுதி வடிவம் பெற மட்டுமே காத்திருக்கிறது மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தாங்கள் மிக அருகில் இருக்கிறோம் ஆனால், ஈரானும் இஸ்ரேலும் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டு அந்த ஒப்பந்தத்தையே ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் இவ்வாறு கூறி வருவதில் உண்மை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், ட்ரம்ப் தொடர்ந்து அதையே கூறி வருகிறார்; இவ்வாறு அவர் கூறி வருவது ஒருவேளை அவர் தவறான நம்பிக்கையில் இருக்கலாம் அல்லது நிதிச சந்தைகளை அமைதிப்படுத்த முயலலாம் அல்லது தனது விருப்பத்தாலேயே அதை நனவாக்கிட முடியும் என்று நினைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.