காசாவில் நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிபர் டிரம்ப் ஒரு சர்வதேச 'அமைதி வாரியத்தை' உருவாக்கியுள்ளார். இந்த உயர்நிலைக் குழுவில், ஒரு முக்கிய உறுப்பினராக இந்தியா இருக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் கடந்த, 2023 ஆம் ஆண்டு அக்டோபர்-7 ஆம் தேதி முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தநிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் அங்கு, முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து காசாவில் மீண்டும் அமைதி திரும்பியது.
இந்தநிலையில் தான், போரினால் நிலைகுலைந்திருந்த காசாவின் நிர்வாகத்தைக் கண்காணித்தல், அங்கு அடிப்படை வசதிகளை மீண்டும் ஏற்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உலகில் அமைதியை நிலைநாட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ’அமைதி வாரியம்’ எனும் உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிறார்.
இந்த வாரியத்தின் தலைவராக டிரம்ப் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டோனி பிளேர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா போன்ற முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே, இந்த வாரியத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான், இந்த வாரியத்தில் உறுப்பினராக இணைய பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்தியா தவிர, எகிப்து, துருக்கி, கனடா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கும் இந்த வாரியத்தில் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் வலுவான உறவுகள் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் பிரதமர் மோடியின் 'மத்தியஸ்தர்'என்ற நற்பெயர் காரணமாக, டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புடனும் இந்தியா கொண்டுள்ள சுமூகமான உறவு இந்த அமைதி முயற்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா நம்புகிறது. கடந்த, செப்டம்பர் மாதம் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தைப் பிரதமர் மோடி வரவேற்றிருந்தார்.
காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு, தற்போது அங்கு நிரந்தர அமைதியை நிலைநாட்டும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.