குடியரசுக் கட்சியின் தோல்வி மற்றும் ஈரான் போர் நடவடிக்கைகளின் விளைவாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் மீது கட்சியினரின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் ட்ரம்ப் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அவரது பதவி நீடிக்குமா என்ற கேள்வி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - M. மீரா
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கு ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான போரைத் தொடங்கியபோது, அதை எப்படித் முடிவுக்குக் கொண்டுவருவது என்பதற்கான தெளிவான திட்டம் ஹெக்செத்திடம் இல்லை என குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போரின் காரணமாக அமெரிக்காவில் விலைவாசி உயர்ந்ததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாசி, பீட் ஹெக்செத்தைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி தீர்மானம் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக ஹெக்செத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒருபுறம் சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் ஹெக்செத்துக்கு ஆதரவாக உள்ளார். அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருவதாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் திட்டம் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர், ஈரான் போர் நடவடிக்கைகள், ராணுவ உயர் அதிகாரிகளின் பணிநீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்திலும் ஹெக்செத் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அவரது பதவி நீடிக்குமா என்ற கேள்வி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.