அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகும். இது அமெரிக்கா-ஈரான் மோதலை மிகப்பெரிய போராக மாற்றும் அபாயத்தை உருவாக்கும் என்று ஈராக் ஆயுதக் குழு எச்சரித்துள்ளது.
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த முறை அமெரிக்கா ஈரானை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக் குழு எச்சரித்துள்ளது.
ஈராக்கைச் சேர்ந்த 'கதாயிப் சையத் அல்-ஷுஹாதா' (Kataib Sayyid al-Shuhada) என்ற ஆயுதக் குழுதான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இந்தக் குழு, ஈராக்கின் மக்கள் அணிதிரட்டல் படையிலும் (Popular Mobilization Forces) ஒரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கினால், தங்களது படைகளும் இந்தப் போரில் களமிறங்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள் என அனைத்தும் தங்களது ஏவுகணைகள், ட்ரோன்களின் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
மீண்டும் போர் தொடங்கினால், அமெரிக்க வீரர்கள் இந்தப் வளைகுடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில்தான் சொந்த நாட்டுக்குத் திரும்பும் என்று அமெரிக்கப் படைகளுக்கு அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மீண்டும் போர் ஏற்படும் சூழலை எதிர்கொள்ள ராணுவத்திற்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ஈரான் மீது எந்த வகையான தாக்குதல் நடத்தப்பட்டாலும் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் பதிலடி குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் மட்டுமே இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அனைத்து ராணுவ இலக்குகளையும் தாக்குதல் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்துவது, நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ராணுவம், புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), காவல்துறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் அதிகபட்ச போர்த் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானுக்கு ஆதரவான பிராந்திய ஆயுதக் குழுக்களுடன் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.