கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடன், வர்த்தக பற்றாக்குறையைக் காரணம் காட்டி, International Emergency Economic Powers Act (IEEPA) என்ற அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். இதனால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்க வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து அமெரிக்க மாகாணங்களும், அந்நாட்டு வணிக நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், இறக்குமதி வரிகளை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும், IEEPA சட்டத்தின் கீழ் ஜனாதிபதி இத்தகைய வரிகளை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. அதிகாரம் இல்லாமல் விதிக்கப்பட்ட இந்த வரி நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என அறிவித்து அவற்றை ரத்து செய்தது. மேலும், வசூலிக்கப்பட்ட தொகையை இறக்குமதியாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, வரி விதிப்பின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்தும் பணியை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது. இதுவரை இறக்குமதியாளர்களிடம் வசூலிக்கப்பட்ட ₹15.77 லட்சம் கோடியில், 60 சதவீத தொகையான சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹9.5 லட்சம் கோடி அளவிலான தொகை இறக்குமதியாளர்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மீதமுள்ள தொகையையும் திருப்பிச் செலுத்தும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் டிரம்பின் வரிக் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, அவரது பொருளாதாரத் திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.