trump , elon musk with Cybertruck  reuters
உலகம்

ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு.. தடுமாறும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் Cybertruck உற்பத்தி குறைவு: விற்பனை வீழ்ச்சி, அரசியல் எதிர்ப்புகள் காரணம்!

PT WEB

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் Cybertruck உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. விற்பனை குறைவு, விலை உயர்வு, மற்றும் ட்ரம்ப் அரசியலுடன் தொடர்புடைய எதிர்ப்புகள் இதற்குக் காரணமாக உள்ளன. சைபர்கேப் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மஸ்க்கின் வணிக சாம்ராஜ்யம் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது புகழ்பெற்ற கனவு திட்டமான Cybertruck வாகனங்களின் உற்பத்தியை அடுத்த ஆண்டு முதல் டெக்ஸாஸ் தொழிற்சாலையில் படிப்படியாக குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், Cybertruck உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தானியங்கி கார்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் சைபர்கேப் (Cybercab)கார்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

tesla's cybertruck

ஆனால், சைபர்டிரக் தயாரிப்பு முழுமையாக நிறுத்தப்படுமா அல்லது வேறு தொழிற்சாலைக்கு மாற்றப்படுமா என்பது குறித்து அவர் தெளிவாகக் கூறவில்லை. அதேநேரத்தில், Cybertruck திட்டத்தின் தலைமைப் பொறியாளர் வெஸ் மோரில், இந்த வாகனத்தின் தொழில்நுட்ப அனுபவம் சைபர்கேப் தயாரிப்பில் தொடரும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சைபர்டிரக் தயாரிப்பு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Cybertruck, அதன் வித்தியாசமான கோண வடிவமைப்பு மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் வெளிப்புற அமைப்பால் கவனம் பெற்றது. பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு 2023-இல் விற்பனைக்கு வந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை.

2024-ல் 38,965 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2025-ல் இந்த எண்ணிக்கை 20,237 ஆகக் குறைந்தது. ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த மஸ்க்கிற்கு இது பின்னடைவாக அமைந்தது.

மேலும், வாகனத்தின் விலை அதிகமாக இருந்ததும், பலமுறை திரும்பப் பெறப்பட்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டதும் விற்பனையைப் பாதித்தன. தற்போது சைபர்பீஸ்ட் மாடலின் விலை 1.02 லட்சம் டாலராக உள்ளது.

டிரம்பின் தேர்தல் பின்னடைவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் மற்றும் வலதுசாரி அரசியலுடன் மஸ்க் நெருக்கமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் Cybertruck வாகனம் ட்ரம்ப் ஆதரவாளர்களின் ஒரு அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் பல இடங்களில் Cybertruckக்குகளைச் சேதப்படுத்தியும், டெஸ்லாவைப் புறக்கணித்தும் போராடினர்.

elon musk

2026 நவம்பர் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினரின் வெற்றிக்காக மஸ்க் சுமார் $450 மில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளார். ஆனால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்து, மஸ்க்கிற்கு பில்லியன் கணக்கில் சொத்து மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டது.

இவ்வாறு ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் தேர்தல் பின்னடைவு மஸ்க்கின் ஒட்டுமொத்த வணிக சாம்ராஜ்யத்திற்கும், டெஸ்லாவின் பங்கு மதிப்புக்கும் ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.