TRUMP ANI
உலகம்

”எங்களைத் தாண்டி யாரும்..” கிரீன்லாந்தில் கால்பதிக்கும் அமெரிக்கா? ட்ரம்ப் போட்ட ஒப்பந்தம்!

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

பனிப்பாறைகள் நிறைந்த தீவு என்றாலே... கிரீன்லாந்துதான் நினைவுக்கு வரும். டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆர்க்டிக் தீவு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஒருகட்டத்தில் கிரீன்லாந்தையே அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என ட்ரம்ப் வெளிப்படையாகப் பேசியிருந்த நிலையில், தற்போது அந்தத் தீவு தொடர்பாக அமெரிக்கா எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Greenland

கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை கணிசமாக அதிகரிப்பதற்கும், அதேவேளையில் அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் ராணுவத் தளங்களை அமைப்பதைத் தடுப்பதற்கும் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது Truth Social பதிவில் இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ட்ரம்ப், கிரீன்லாந்தின் பாதுகாப்பையும் அமெரிக்காவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அந்தத் தீவில் அமெரிக்காவுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் திறன் என்றென்றும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு காலாவதி தேதி எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவத் தளங்களை அமைப்பதற்கும், ராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கும், முக்கியமான முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அமெரிக்காவின் அனுமதி தேவைப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

TRUMP

“அப்படியானால் அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்கிவிட்டதா?” என்றால் இல்லை.... இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அல்ல. கிரீன்லாந்து தொடர்ந்து டென்மார்க் இராஜ்ஜியத்தின் தன்னாட்சிப் பகுதியாகவே இருக்கும். மாறாக, ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ அணுகல் மற்றும் இருப்பை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளே இதில் முக்கியமாக இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் என்ன என்பது குறித்து முழுமையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.