இணையவாசிகளின் கிண்டல்களுக்கு, தன்னுடைய பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆப்பிள் சிஇஓ டிம் குக் பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச்செய்த ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், ஆப்பிள் சிஇஓ பெயரை 'டிம் குக்' என்று சொல்லாமல் 'டிம் ஆப்பிள்' என்று தவறுதலாக கூறிவிட்டார்.
அதனை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. ஆனால் இணையவாசிகள் இதனை உற்றுக்கவனித்து கிண்டல் செய்து மீம்களை அள்ளி வீசத்தொடங்கிவிட்டனர். ஆப்பிள் நிறுவனத்தலைவர் 'டிம் ஆப்பிள்' என்றால் பேஸ்புக் ஓனரான மார்க் பெயர் என்ன? 'மார்க் பேஸ்புக்கா'? என்று கேள்வி எழுப்பத்தொடங்கினர்.
இந்தச் சமூக வலைத்தள கிண்டல் பதிவுகளை கவனித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக், அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பெயருடன் ஆப்பிள் லோகோ வரும் படி மாற்றி அமைத்துவிட்டார். தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தின் பெயரில் டிம் உடன் சேர்த்து ஆப்பிள் லோகோவும் வருகிறது. இந்த லோகோ ஆப்பிள் நிறுவனங்களைச் சேர்ந்த தயாரிப்புகளில் மட்டுமே தெரியும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற தயாரிப்புகளில் வெறும் சதுர கட்டமாக மட்டுமே தெரிகிறது.
தன்னை கிண்டல் செய்த இணையவாசிகளுக்கு பதிலளிக்கும் வகையில் மட்டுமல்லாமல் தன்னுடைய நிறுவனத்துக்கு மறைமுக விளம்பரத்தையும் தேட வைத்த டிம் குக்கை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.