Trump reuters
உலகம்

'ஈரான் போரால் பின்னடைவு..' அமெரிக்க மக்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்!

ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தல்: எண்ணெய் விலை உயர்வை தியாகமாக ஏற்குமாறு ட்ரம்ப் வேண்டுகோள்!

PT WEB

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு குறித்து ட்ரம்ப் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஈரானின் அணு ஆயுத விவகாரமும், போர் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையும் அந்நாட்டு அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

Trump

பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் கூடுதல் செலவுகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதைத் தடுப்பதற்காக மக்கள் கொடுக்கும் கூடுதல் விலை ஒரு சிறிய தியாகம்தான் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். இதற்காக எரிபொருள் விலை உயர்வைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்ற வகையில் பேசியுள்ளார். பெட்ரோல் விலை இரட்டிப்பாகவோ, மூன்று மடங்காகவோ உயரக்கூடும் என்று தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த அளவுக்கு விலை அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Maduro's arrest

ஈரானை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாகக் கருதுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். கூடவே வெனிசுலா விவகாரத்தையும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் காத்திருப்பதாக கூறினார். மேலும், வெனிசுலாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அங்கிருந்து ஒவ்வொரு வாரமும் பல மில்லியன் பேரல் எண்ணெய் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தித் திறனை அழித்துவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், இதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார். ஈரானுடன் அமெரிக்காவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் தவறானது என்றும் அவர் விமர்சித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி வெற்றி பெறும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள், அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றை தனது கொள்கைகளுக்கு ஆதரவான வாதங்களாக ட்ரம்ப் முன்வைத்து வருகிறார். இருப்பினும், போர் காரணமாக அதிகரிக்கும் எரிபொருள் செலவுகள் அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானதாக உள்ளது.