அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து, அவரது அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், உயர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பிடெக் முடித்தார். அவர் தனது 21வது வயதில் (2005ஆம் ஆண்டு) அமெரிக்கா சென்றார். அவருடைய தொழில்நுட்ப பயணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தொடங்கியது. ட்விட்டர், யாகூ, ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப் போன்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார். அவர் ஃபேஸ்புக் (தற்போது மெட்டா) மற்றும் ஸ்னாப் நிறுவனங்களில் தனது பதவிக் காலத்தில் மொபைல் விளம்பர தயாரிப்புகளை உருவாக்கினார்.
மேலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் 2022இல் ட்விட்டரில் இணைந்தபோது, அதை மறுசீரமைக்க மஸ்க் உடன் பணியாற்றினார். OpenAIஇன் ChatGPT மற்றும் பெரிய இணைய தளங்கள் போன்ற AI- உந்துதல் மாதிரிகளுக்கு இடையேயான சவால்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்சுடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐக்கான அமெரிக்க தலைமை பொறுப்பைக் கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ. கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபர் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.