அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்பு கொள்கையை எதிர்ப்பவர்களை எதுவும் அறியாதவர்கள் என்றும், வரிவிதிப்பு அமெரிக்காவை வலிமையாகவும் செல்வந்தராகவும் மாற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அதில் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்துள்ளார்.
இந்த வரி விதிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறிதும் அசராத அதிபர் ட்ரம்ப் வரிகள்தான் அமெரிக்காவை உலகின் "பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும்" நாடாக மாற்றுகின்றன என்று கூறினார்.. இந்நிலையில் இது குறித்து தனது Truth Social பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், ”தனது வரிவிதிப்பு அமெரிக்காவிற்கு பெரும் பலமாக இருப்பதாகவும் இந்த வரி விதிப்பு கொள்கையை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் ” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வரிவிதிப்பு கொள்கைகள் அமெரிக்காவை வலிமையாகவும் பணக்கார நாடாகவும் மாற்றியுள்ளது. மேலும் பண வீக்கமே இல்லாமல், பெரும் அளவில் பங்குச்சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக அமெரிக்கா மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் பெறப்படும் வருவாயில் இருந்து, அமெரிக்க குடிமக்களுக்கு தலா 2,000 டாலர் வழங்கப்படுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது வரி குறைப்பல்ல என்றும் மக்களுக்கு நேரடி நன்மையாக வழங்கப்படும் ‘டாரிஃப் டிவிடெண்ட்’ ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க மக்களுக்கு நியாயமான பலன் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில், சட்டம் மற்றும் பொருளாதார சவால்களை நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். இந்த 2,000 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.77 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது..