உலகம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்

webteam

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.

ட்ரம்ப் தலைமையிலான அரசில் பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்டன் இருந்து வந்தார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் போல்டன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் மற்றும் வடகொரியா, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளியுறவு கொள்கை ஆகியவற்றில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. 

இந்நிலையில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதிவியிலிருந்து ஜான் போல்டன் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ ஜான் போல்டனின் ஆலோசனைகள்  பல ஏற்கும்படி  இல்லை என்பதால் அவரைப் பதவியை விட்டு விலகுமாறு வலியுறுத்தினேன். அதற்கு ஏற்ப அவர் இன்று என்னிடம் பதவி விலகும் கடிதத்தை எனக்கு அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட அவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளேன். அவர் இதுவரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இவருக்குப் பதில் புதிய ஆலோசகர் யார் என்பதை அடுத்த வாரம் அறிவிக்க போவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு இது வரை 3 பேர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது