MQ-4C Triton  web
உலகம்

ஈரான் பதற்றம் | ஹார்முஸ் ஜலசந்தியை கண்காணித்த அமெரிக்க ட்ரோன்.. சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க கடற்படையின் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கண்காணிப்பு ட்ரோன் ஹார்முஸ் ஜலசந்தியின் மீது காணாமல் போனது.

PT WEB

அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ஆளில்லா விமானங்களில் ஒன்றான, MQ-4C டிரைட்டன் கண்காணிப்பு ட்ரோன், வானில் அவசரநிலையை அறிவித்த பின்னர் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேலே காணாமல் போனது. இது விபத்துக்குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான 2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மீட்டெடுக்கும் சாத்தியத்துடன், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்தம் அறிவித்து 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் 100க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது

Hormuz

இந்நிலையில் அமெரிக்காவின் மிகவும் விலையுயர்ந்த 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கண்காணிப்பு ட்ரோன் , MQ-4C டிரைட்டன் பறந்துகொண்டிருக்கும்போதே அவசர எச்சரிக்கை விடுத்தது. பின்பு சிறிது நேரத்திலேயே, இன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு மேலே காணாமல் போனது.

Flightradar24-இன் விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி அந்த ட்ரோன் பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை சுமார் மூன்று மணி நேரம் கண்காணித்து முடித்துவிட்டு, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்திற்குத் திரும்பி வருவதாகத் தெரிந்தது . அந்த ட்ரோன் ஈரானை நோக்கி லேசாகத் திரும்பி, வேகமாகக் கீழே இறங்குவதற்கு முன்பு, 7700 என்ற குறியீட்டுடன் கூடிய பொது அவசரகால சமிக்ஞையை அனுப்பியது தெரியவந்தது. ஆளில்லா அந்த விமானம் மறைவதற்கு முன்பு, அதன் உயரம் வேகமாக குறைந்து செல்வதும் தெரிந்தது. பின்னர் அது கண்காணிப்புத் திரைகளில் இருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டது.

இதனால், ட்ரோன் விபத்துக்குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாரம்பரிய விமானங்களைப் போலல்லாமல், MQ-4C Triton முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் நீண்ட நேர நுட்பமான கண்காணிப்பை வழங்குகிறது. இது தொடர்ச்சியான, பெரிய அளவிலான கடல்சார் கண்காணிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது அடிக்கடி பி-8ஏ பொசைடன் ரோந்து விமானங்களுக்கு (P-8A Poseidon patrol planes) உயரமான இடங்களிலிருந்து கண்காணிக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

MQ-4C Triton

டிரைட்டன் மட்டுமே 50,000 அடிக்கு மேலான உயரத்தில், 24 மணி நேரத்திற்கும் மேலாக 7,400 கடல் மைல்கள் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட, தன்னாட்சி முறையில் இயங்கும் ஒரே உயரமான, நீண்ட நேரம் பறக்கும் (HALE) கடல்சார் விமானமாகும்.