பப்புவா நியூ கினியா
பப்புவா நியூ கினியா ட்விட்டர்
உலகம்

பப்புவா நியூ கினியா: இரு பழங்குடி குழுக்களிடையே பயங்கர மோதல்! போர்க்களமாய் மாறிய சண்டை - 64 பேர் பலி

Prakash J

ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள பப்புவா நியூ கினியா, சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள்தொகை கொண்ட ஒரு பசிபிக் தீவு நாடாகும். உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான இந்த நாட்டில், நிலப்பரப்பு முழுவதும் நூற்றுக்கணக்கான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதனால், காலந்தொட்டே அவர்களுக்கு நிலம் மற்றும் சொத்து தகராறு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600 கிலோமீட்டர் (370 மைல்களுக்கு மேல்) தொலைவில் அமைந்துள்ள எங்கா மாகாணத்தின் மிடில் லாய் பகுதியில் நீடித்த நிலப் பிரச்னையில் நேற்று (பிப்.18) பழங்குடியினரில் அம்புலின் மற்றும் சிக்கின் ஆகிய பிரிவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில், இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். துப்பாக்கியாலும் சுட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 26 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் டிரக்குகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.

தற்போது வரை 60க்கும் மேற்பட்ட உடல்களை போலீசார் சேகரித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது. மேலும் காயமடைந்த, உயிரிழந்த உடல்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அம்புலின் மற்றும் சிக்கின் ஆகிய பழங்குடியினருக்கு இடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதலே மோதல் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்தனர் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

’பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது’ என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். மேலும், பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.