அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தமிழக திருநங்கை ரேவதியின் சுயசரிதை இடம்பெற்றுள்ளது.
தெனாவெட்டு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திருநங்கை ரேவதி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருநங்கைகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை 'உணர்வும் உருவமும்' என்ற தனது முதல் புத்தகத்தின் மூலம் இவர் வெளிப்படுத்தியிருந்தார். திருநங்கைகளின் உரிமை குறித்து திருநங்கைகளின் பார்வையில் இருந்து பேசிய அந்த நூல் பல விருதுகளையும் பெற்றது.
பின்னர் தனது சுயசரிதையை ‘THE TRUTH ABOUT ME’ என்ற பெயரில் ரேவதி ஆங்கிலத்தில் வெளியிட்டார். பெங்குயின் பதிப்பகம் வெளியிட்ட ரேவதியின் சுயசரிதைப் புத்தகம், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே அதிக அளவில் இடம்பெற்றிருக்கும் இந்த நூலகத்தில் திருநங்கை எழுத்தாளர் ரேவதியின் புத்தகமும் இடம்பெற்றிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.