அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிறப்பால் ஆணாக பிறந்து, பின் மன அளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு பெண்ணாக மாறுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதேபோல் பிறப்பில் பெண்பாலாகவும், மன அளவில் ஆண்பாலாகவும் அறியப்படுவர்கள் திருநம்பிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பொதுவாக திருநங்கைகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது மருத்துவ உலகில் இதுவரை இல்லை.
இந்நிலையில் அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். பிறப்பால் பெண்ணாக பிறந்த இவர், மன அளவில் தன்னை ஆணாக உணர்ந்துள்ளார்.
இதனயைடுத்து 21 வயதில் பெண்ணிலிருந்து ஆணாக மாறியுள்ளார். மேலும் இவர் ஸ்டீபன் கேத் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிம்ப்சன், தான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்துள்ளார். சிம்ப்சனுக்கு மாதவிடாய் நின்ற நிலையில், அவர் கர்ப்பம் அடைய வாய்ப்பே இல்லை என்ற மருத்தவர்கள் கூறிய நிலையில் அவர் கர்ப்பம் அடைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முகத்தில் தாடி, மீசையுடனும் வயிற்றில் குழந்தையுடனும் சென்ற அவரை தெருவில் பலரும் பார்த்து நக்கல் செய்துள்ளனர். ஆனால் அதனையெல்லாம் சிம்ப்சன் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன் அவருக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது தான் இந்தச் செய்தி வெளியாகி உள்ள நிலையில், தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பதாக சிம்ப்சன் கூறியுள்ளார். அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் சிம்ப்சன் தெரிவித்துவிட்டார்.