தியான்ஜின் SCO மாநாடு web
உலகம்

இந்தியா+சீனா+ரஷ்யா|ட்ரம்ப் தொடர்ந்த வர்த்தகப்போர்.. ஒன்றிணைந்த ஆசிய நாடுகள்!

இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 20 ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு சீனாவில் ஒன்றிணைத்துள்ளது.

PT WEB

தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் நோக்கங்கள் என்னென்ன? மேற்குலகம் கிழக்குலகத்தின் இந்த இணைவை எவ்வாறு பார்க்கிறது இந்த பெரும் செய்தியாக பார்க்கலாம்.

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்

"பனிப்போர் முடிந்து விட்டது என நினைத்து ஒற்றை துருவமே உலகம் என கருதக்கூடாது. பல துருவங்கள் தான் உலகின் சமநிலையை கொடுக்கும்" இதுதான் 2001 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப்படும் SCO தொடங்கப்பட்டபோது அப்போதைய சீன அதிபர் ஜியாங் சேமின் பேசிய வார்த்தைகள். சோவியத்தின் முடிவிற்கு பிறகு அமெரிக்காவை எதிர்க்க உலகில் வேறு எந்த சக்தியும் இல்லை என கருதத் தொடங்கிய நேரத்தில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை சற்று மிரள செய்தது. பூமிப் பந்தில் மற்றொருபுறம் அமெரிக்காவின் நிலப்பகுதி இருந்தாலும் மறுபுறத்தில் இருக்கக்கூடிய ஆப்கானிஸ்தான், ஈராக், மத்திய கிழக்கு நாடுகள் என பல இடங்களில் அரசியல் போக்கை மாற்றக்கூடிய வல்லமை அமெரிக்காவிடம் இருந்தது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்புகள் சீனாவின் உள்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அமெரிக்கா அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தியான்ஜின் SCO மாநாடு

குறிப்பாக நவீன தொழில் புரட்சி எனக் கூறப்படும் கணினி மற்றும் மின்னணு தொடர்பான அனைத்து வன்பொருட்களும் சீனாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 1980 க்கு பிறகு சீனாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக முன்னேறிய நிலையில், அமெரிக்காவிற்கு அடுத்த வல்லரசாக சீனா தன்னை கருதி தொடங்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. G20, Quad, Brics, Asean போன்ற கூட்டுறவு அமைப்பை போலவே பொருளாதாரம், பாதுகாப்பு, ஒருங்கிணைந்த முன்னேற்றம் உள்ளிட்டவற்றை தாரக மந்திரமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. ஆனால் மற்ற அமைப்புகளை விட SCO விற்கு ஒரு சிறப்பு இருக்குமானால் அது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை முழுமையாக உள்ளடக்கிய பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மேற்கு நாடுகள் தலையீடு இல்லாத ஒரு அமைப்பு. இதேபோன்று Brics, Asean போன்ற அமைப்புகள் இருந்தாலும் இதில் பொருளாதாரம் மட்டுமே முக்கிய கருதுகோளாக இருந்தது. ஆனால் சீனா உருவாக்கிய SCO அப்படியே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட கிழக்கின் குரல் என்று சொல்லலாம். 2017ம் ஆண்டு SCOயில் இந்தியா ஒரு முக்கிய உறுப்பினராக இணைந்த நிலையில், 2018ல் சீனாவில் உள்ள கிங்டுவோவிலும், 2019ல் கசக்கிஸ்தானில் பிஸ்கேக்கில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற SCO மாநாடுகளில் காணொளி காட்சி மூலமாகத்தான் பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு வருடமாக பங்கேற்று வந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு பெரும்பாலான SCO தலைவர்களை, வடக்கு சீன நகரமான தியான்ஜினில் இணைய வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் மனித வளம் கொண்ட அமைப்பாக SCO பிராந்திய குழுவாக வளர்ந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதியில் SCO மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2001-ல் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் கவனம் கடந்த இரண்டு தசாப்தங்களில் மத்திய ஆசியப் பிரச்னைகளில் இருந்து உலகளாவிய விவகாரங்களை நோக்கி மாறியுள்ளது.

சீனாவின் சர்வதேச ஆட்சிமுறை கட்டமைப்பாக மாறிய SCO..

இதைவிட முக்கியமானது, SCO அமைப்பு சீனாவினுடைய ‘இணை சர்வதேச ஆட்சி முறை கட்டமைப்பின்’ ஒரு அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய வல்லரசாக பெய்ஜிங் உருவெடுத்துள்ள நிலையில், SCO அமைப்பு “அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச அமைப்புக்கு” வெளியே உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான சூழலை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. தியான்ஜின் மாநாடு பெரும்பாலும் ஒரு அடையாளரீதியான ஒன்றாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் போர் எதிர் எதிராக இருந்த ஆசிய நாடுகளை ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைத்துள்ளது என சர்வதேச புவி அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை, பிராந்திய செயல்பாடுகளால் சுமுகம் இல்லாத நிலை இருந்த நிலையில், தியான்ஜின் மாநாடு இந்த நாட்டு தலைவர்களை நேரில் வரவழைத்து பொதுவான உரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தியான்ஜின் SCO மாநாடு

இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா, சவுதி அரேபியா - ஈரான், மற்றும் மத்திய ஆசியா - சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே பல ஆண்டுகளாக நீண்டகால பகைகளும் எல்லைப் பிரச்னைகளும் நிலவிவருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, துருக்கி, கத்தார், கம்போடியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளாக அதிகாரப்பூர்வமான உரையாடல் கூட்டாளிகளாக இணைந்துள்ளதும், இந்த மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கலந்துகொள்வதும் மேற்கு நாடுகளுக்குத் தரும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மோடி..

ஏழு வருடங்களுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு SCO மாநாட்டில் நடைபெறுவதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனை, யாத்திரிகர்களுக்கான விசா, பரஸ்பர வர்த்தகம் உள்ளிட்டவற்றை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் குறைக்காத காரணத்தினால் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், வர்த்தக உறவில் மக்களுக்கான தேவையை உணர்ந்து செயலாற்றுவதாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் தியான்ஜின் நகரில் இந்திய பிரதமரும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பின் உள்ளிட்ட தலைவர்கள் நெருக்கமாக உரையாடும் காணொளி மேற்கு ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டு வருகின்றது. ​ அதோடு அமெரிக்காவுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் SCO மாநாட்டில் பங்கேற்றுள்ளார். பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி மாநாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என கண்டனத்தை பதிவு செய்திருக்கும் நிலையில், புதின் மற்றும் மோடி ஆகியோர் இணைந்து செல்வதை பாகிஸ்தான் பிரதமர் பார்க்கும் காணொளி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. காரணம் என்னவெனில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது ரஷ்யாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு என கூறப்படுகிறது.

தியான்ஜின் SCO மாநாடு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றங்களுக்காகத் தேடப்படும் புடின், பெலாரஸின் சர்வாதிகாரத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போன்ற தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே சீனா இந்தியா ரஷ்யாவின் பொருளாதாரக் கூட்டமைப்பான BRICS அமைப்பை தடை செய்ய வேண்டும் என டிரம்ப் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் QUAD அமைப்பிற்கு மாற்றாக ஆசிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்பாக சீனா இந்த அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரின் உரையாடல் அதற்குப் பிறகு பெய்ஜிங் பேசும் மொழியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட முக்கியமான இராஜதந்திர சமிக்ஞைகளைக் கொண்டிருக்கும் என சர்வதேச புவி அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து சீனா ரஷ்யாவுக்குப் பொருளாதார ரீதியாக அதிகம் உதவி செய்தும் ட்ரம்ப்பிடம் இருந்து எந்தத் தடைகளையும் எதிர்கொள்ளவில்லை என்பதால் இது புதுடில்லிக்குப் பெரும் கவலையாக உள்ளது.

தியான்ஜின் SCO மாநாட்டின் நோக்கம் என்ன?

திரைக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இயங்கிக்கொண்டிருப்பதால், SCO-ன் முடிவாக, கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார நடவடிக்கைக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்த மாநாட்டின் கூட்ட அறிக்கையை ஒரு வாய்ப்பாக கருதுகின்றனர்.

தியான்ஜின் SCO மாநாடு

தியான்ஜின் SCO மாநாட்டை பொருத்தவரை ஆசிய நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தக, எல்லை பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து அதன் மூலம் மேற்கு நாடுகளுக்கு இடையிலான கூட்டமைப்பு வட்டத்தை பெரிது படுத்துவது தான் சீனா மற்றும் ரஷ்யாவின் திட்டமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் மேற்கு நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாக மோடியின் ஜப்பானிய பயணம் என்பதும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பினால் இந்தியாவில் ஜவுளி, தோல், கடல் உணவுகள் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக இந்தியா நிகழ்த்தியுள்ள வெளியுறவு பரஸ்பரமாக SCO மாநாடு பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 3-ம் தேதி ஆசியாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிப் பெய்ஜிங்கில் நடைபெறும் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு நடைபெறும் நிலையில் அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவும் தனது வெளியுறவு கொள்கையில் சில மாறுதல்களை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டதாகவே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தியான்ஜின் SCO மாநாடு

எப்படியோ தியான்ஜின் SCO மாநாடு சீனா தனது நண்பர்கள் வட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதையும், யார் சீனாவிற்கு நண்பராக இருக்க முடியும், யார் சீனாவின் கருத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்