செய்தியாளர் - M.மீரா
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருக்கு, சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.
துபாயைச் சேர்ந்த ரிச்கீ ப்ராப்பர்டீஸ் (Richkey Properties) நிறுவனத்தில் பணியாற்றுபவர் நடாலியா சாவேஸ் (Natalia Chavez). இவர் நிறுவனத்தின் சிறந்த ஊழியராகத் தேர்வு செய்யப்பட்டு, 2026-ம் ஆண்டுக்கான 'top performer' விருதையும் பெற்றுள்ளார்.
துபாயின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. நடாலியா சாவேஸ் (Natalia Chavez) கடந்த 2ஆண்டுகளில் மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ₹4,200 கோடிக்கும் அதிகம்) மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இவரது இந்த அசாத்திய உழைப்பை பாராட்டும் விதமாக, நிறுவனத்தின் 3வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் இவருக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய நீல நிற லம்போர்கினி உருஸ் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
நடாலியா இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். முதல் காலாண்டில் 3வது இடத்தைப் பிடித்த அவர், இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் சிறந்த ஊழியர் விருதைப் பெற்றார். இறுதியாக, 2026-ம் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த ஊழியராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
துபாயில் லம்போர்கினி உருஸ் காரின் விலை அதன் மாடல் மற்றும் வசதிகளைப் பொறுத்து சுமார் ரூ.2.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கலாம். நடாலியாவுக்கு வழங்கப்பட்ட காரின் சரியான மாடல் மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை