Top 10 world News PT
உலகம்

Top10 உலகச் செய்திகள்|’டைம்’ இதழில் முதலிடம் பிடித்த ட்ரம்ப் To இம்ரான் கான் மீது புதிய வழக்கு!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. இஸ்தான்புல்லில் சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர். இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

2. கார்கள் மோதி முறிந்த விமானம்

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில், இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் ஒன்று கார்கள் மீது மோதியது. சாலைக்கு மேல் தாழ்வாக பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக விக்டோரியா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3. ’டைம்’ இதழில் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, அவர் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அதிகம் செல்வாக்குமிக்க நபரில், டொனால்டு ட்ரம்ப் 'டைம்’ இதழில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்.

4. ஜோர்டான் முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஜோர்டான் தலைநகர் அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் சுமார் 111 முதியவர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்று அந்த முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 6 முதியவர்கள் பலியான நிலையில், 55 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

5. இங்கிலாந்தில் இந்திய மாணவர் பலி

இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டா் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். உயரிழந்த சிரஞ்சீவி பங்குளுரி மற்றும் அந்தக் காரில் பயணித்த 4 பேரும் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் என காவல் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

6. ’வங்கத்துக்கு வெற்றி’ - இனி தேசிய கோஷம் இல்லை!

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட, ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம், இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுா் ரஹ்மானால் பிரபலப்படுத்தப்பட்ட அந்த முழக்கம், பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு மிகப் உந்துசக்தியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

7. ”சிரியாவில் தங்கள் படை ஊடுருவியிருப்பது நியாயமே!”

சிரியாவைக் கிளர்ச்சிப் படை கைப்பற்றியதால், அந்நாட்டின் முன்னாள் அதிபரான பஷார் அல் அசாத்தின் குடும்ப ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நாட்டுக்குள் தங்கள் படையினர் ஊடுருவியுள்ளது நியாயமே என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்பு சிரியா பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தியிருந்தார். அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது.

8. இம்ரான் கான் மீது புதிய வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர், இம்ரான் கான் நவம்பர் 26 அன்று இஸ்லாமாபாத்தில் கட்சி நடத்திய போராட்டத்தின்போது மூன்று போலீசார் இறந்தது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராம்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின்படி, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர்மீது கொலை, பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இம்ரான் கான்

9. 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பு

அமெரிக்காவில் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அந்த வகையில், சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடம் முறையான ஆவணங்கள் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலை, அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இதில் மொத்தம் 15 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

சீனா, அமெரிக்கா

10. சீனா பொருட்களுக்கு அதிக வரி!

அமெரிக்காவின் சுத்தமான எரிசக்தி வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட சோலார் தகடு,பாலிசிலிக்கான் மீதான இறக்குமதி வரி 25% முதல் 50% ஆக அதிகரிக்கப்படும். டங்க்ஸ்டன் தயாரிப்புகளின் இறக்குமதி வரி 25% சதவீதமாக உயர்த்தப்படும்” என அமெரிக்கா அறிவித்துள்ளது. ’இந்த கட்டண உயர்வு வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தின் சீனா மீது அதிகம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.