top 10 world news x page
உலகம்

Top 10 உலகம் | பிரான்ஸ் நாட்டில் ஆட்சி மாற்றம் To WHO-லிருந்து வெளியேறும் அமெரிக்கா!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. பிரான்ஸ் நாட்டில் ஆட்சி மாற்றம்

நடப்பாண்டில் 4ஆவது முறையாக பிரான்ஸ் நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன் தேர்வான பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மைக்கல் பார்னியர் அரசு கவிழ்ந்தது. இந்த ஆண்டின் 4ஆவது அரசை அதிபர் மேக்ரான் அறிவித்தார். அதனை தொடர்ந்து பிரான்சுவா பெய்ரூ தலைமையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸ், எலிசபெத் போர்வ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பிரான்சுவா பெய்ரூ

2. சீனாவிடம் ஜெட் விமானங்களை வாங்க பாகிஸ்தான் திட்டம்

சீனாவிடம் இருந்து 40 அதிநவீன ஜெட் விமானங்களை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. J 35 வகையைச் சேர்ந்த இந்த விமானங்கள் சீனாவின் புதிய தயாரிப்புகளாகும். 5ஆம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட இவ்விமானங்களை சீனாவிடம் இருந்து பெறும் முதல் நாடு பாகிஸ்தான் ஆகும். 40 விமானங்களையும் 2 ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பழமையான அமெரிக்காவின் F 16 விமானங்கள், பிரான்சின் மிராஜ் ரக விமானங்களே உள்ளது. தற்போது பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில் மிகுந்த பொருட்செலவில் புதிய விமானங்களை வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் 3 படைகளையும் பலப்படுத்த சீனா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.

china, pakistan

3. பார்வையாளர்களைக் கவர்ந்த புலிக்குட்டிகள்

தாய்லாந்து நாட்டில் சியாங்மாய் என்ற நகரத்தில் விலங்கியல் பூங்காவில் உள்ள 3 வயதான இரு புலிக்குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகின்றன. வழக்கமான புலிகளைப் போல் அன்றி சற்றே மாறுபட்ட முகத்தோற்றம் கொண்ட தங்க நிறத்துடன் கூடிய இந்த அரியவகை புலிகளை மக்கள் ரசித்துப் பார்க்கின்றனர். மரபணு ரீதியில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக தோற்ற மாற்றம் கொண்ட இப்புலிகள் கடந்த ஜூன் மாதம் சியாங் மாய் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன. இது போன்ற புலிகள் காட்டில் வளர இயலாது என்றும் சிறப்பு பராமரிப்புடன் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே வளர்க்க முடியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

4. துருக்கி வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் அருகில் உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு சதி வேலை எதுவும் காரணமாக இருக்காது என உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

who

5. உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்?

ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் அறிவிப்பை வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளில் டொனால்டு ட்ரம்ப் நீண்டகாலமாகவே அதிருப்தி கொண்டுள்ளார். இந்நிலையில் அதிபர் நாற்காலியில் அமர்ந்த முதல் நாளிலேயே அந்த அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு உலக சுகாதார அமைப்பிற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக சுகாதார அமைப்பு பெறும் நிதியுதவியில் 16 சதவீதத்தை அமெரிக்காதான் தருகிறது. கொரோனா காலகட்டத்தில் சீனாவுக்கு சாதகமான முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகமது யூனுஸ்

6. வங்கதேச அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவனுடன் வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் நிலையான சுமுகமான அரசு அமையவும் அது தனது சவால்களை சமாளிக்கவும் உதவ உறுதி பூண்டுள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் வாய்மொழி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட இப்பேச்சுவார்த்தை கவனம் பெறுகிறது.

7. ரஷ்ய சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து

மத்திய தரைக்கடல் பகுதியில், ரஷ்ய சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கப்பல் குழுவை சேர்ந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர். ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் 16 பேருடன் சென்றுகொண்டிருந்த அர்சா மேஜர் எனப்படும் ரஷ்ய சரக்கு கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எஞ்ஜின் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, கப்பல் கடலில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து, தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கப்பல் குழுவினர் 14 பேரை பத்திரமாக மீட்டு ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பில் கிளிண்டன்

8. பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து வாஷிங்டன்னில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது எனவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரீஸுக்காக பில் கிளிண்டன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை 2 முறை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

9. அமேசான் நிறுவனத் தலைவருக்கு திருமணம்

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், லாரன் சாஞ்சஸ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதன்படி, இவர்களுடைய திருமணம் வரும் 28ஆம் தேதி கொலராடோ மாகாணத்தின் ஆஸ்பன் நகரில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி (600 மில்லியன் டாலர்கள்) என தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதனை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால், இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

ஜெப் பெசோஸ்

10. சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம்

அமெரிக்கா ஏவுகணையை நிறுத்தும் முடிவால் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவை ஒட்டிய எல்லையை நோக்கி ஏவுகணையை அனுப்ப பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அமெரிக்க நடுத்தர தூர ஏவுகணையான டைபூனை, எல்லையில் நிறுத்த பிலிப்பைன்ஸ் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளைச் செய்து வருவதை சீனா எதிர்த்து வரும் நிலையில், தற்போது சீனாவை நோக்கி ஏவுகணையை நிறுத்தப் போவதாக பிலிப்லைன்ஸ் அறிவித்து இருப்பது மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.