ஏஐ எக்ஸ் தளம்
உலகம்

உலகெங்கும் வீசும் AI புயல்.. டாப் 10 நாடுகள் எவை?

ஏஐ தொழில்நுட்பம் வழக்கமான ஒரு அறிவியல் நுட்பம் என்பதை தாண்டி மனித வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PT WEB

ஏஐ தொழில்நுட்பம் வழக்கமான ஒரு அறிவியல் நுட்பம் என்பதை தாண்டி மனித வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியிலிருந்து சமூக மாற்றம் வரை எட்டுத்திசைகளில் இருந்து ஏஐயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த தொழில்நுட்பத்தை தங்கள் வசப்படுத்த உலக நாடுகள் பரபரப்பாக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கா இத்துறையில் ஜாம்பவானாக உள்ள நிலையில் அதை முந்த சீனா காய் நகர்த்தி வருகிறது. தற்போதைய நிலையில் உலக ஏஐ அரங்கில் முதல் 10 நாடுகளில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வரிசையை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

AI

அமெரிக்கா 70.06 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் சீனா 40.17 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டன் 27.21 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இந்தியா 25.54 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், தென்கொரியா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்த 6 இடங்களில் உள்ளன.

சீனாவின் சின்னஞ்சிறு நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய டீப்சீக் ஏஐ மாடல் தொழில்நுட்ப உலகில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது. ஏஐ மாடல்கள் என்றால் ராக்கெட் தொழில்நுட்பம் அளவுக்கும் மிகப்பெரும் செலவு பிடிக்கும் என்றும் நிலவிய கருத்தாக்கத்தை சர்வசாதாரணமாக சின்னஞ்சிறு புத்தாக்க நிறுவனம் உடைத்தெறிந்ததுதான் இதற்கு காரணம். டீப்சீக் புயல் வீசி ஓயும் முன்பே சீனாவின் அலிபாபா நிறுவனம் மேலும் ஒரு ஏஐ மாடலை களமிறக்கி கதிகலலங்க வைத்தது.

deepseek

சீனாவின் இந்த பாய்ச்சல் அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எச்சரிக்கை என வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலக வல்லரசாக நீடிக்க ஏஐ ஆதிக்கம் முக்கியம் என உணர்ந்துள்ள அமெரிக்கா 500 பில்லியன் டாலர்கள் கோடி செலவில் ஏஐ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஸ்டார்கேட் திட்டத்தை அறிவித்துள்ளார் ட்ரம்ப். மறுமுனையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கு அத்தியாவசியமான கேலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி, சிலிகான், அலுமினியம் போன்ற தனிமங்களை உற்பத்தி செய்து குவிப்பதில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.