தற்காலப் புரட்சியாளர்களின் முன்னோடி சே குவேரா. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தாலும் புரட்சிகர எண்ணங்களில் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர். மரணம்வரை புரட்சி செய்த போராளி சே குவேராவின் நினைவு தினம் இன்று.
சே நினைவு தினம் இன்று. தலைகுனிந்து வாழ்வதைவிட, நிமிர்ந்து நின்று செத்துப் போவது மேல் என்று முழங்கியவர் சே குவேரா. முதலாளித்துவம் எங்கெல்லாம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் சமூக நீதி பாதிக்கப்படும் என்ற கருத்து அவருக்குள் இருந்தது. அமெரிக்காவாக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் முதலாளித்துவம் அடிமைகளை உருவாக்குவதற்கே பயன்படுகிறது என்று சே கூறினார். அமெரிக்கா குறித்து அந்த நாட்டுக்கே சென்று கண்டித்துப் பேசினார்.
கியூபாவின் மூத்த அமைச்சர், மத்திய வங்கியின் தலைவர் என வசதியும் அதிகாரமும் அவரிடம் இருந்தபோதுகூட, புரட்சியாளர் என்ற அடையாளத்தில் இருந்து அவர் விலகிவிட விரும்பவில்லை. அவரது தீவிர முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளால் பல நாடுகள் அவருக்கு எதிரிகளாகியிருந்தன. அவரது உயிருக்குக் குறிவைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்காக 1964-ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு அவர் சென்றபோது இரண்டு முறை அவரைக் கொல்வதற்கு எதிரிகள் முயற்சி செய்தார்கள். தப்பித்துவிட்டார்.
ஆனால் அதன் பிறகு கியூபாவின் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து படிப்படியாக விலகினார். அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்தார். ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு கியூபாவை விட்டு வெளியேறினார். கியூபாவில் இருந்து வெளியேறிய சே குவேரா, ஆப்பிரிக்க நாடான காங்கோவுக்குச் சென்றார். சில கியூப வீரர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்ற சே குவேரா, காங்கோ புரட்சிப் படையுடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போரிட்டார்.
1966-ஆம் ஆண்டு கியூபாவில் இருந்து வேறொரு பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம், தென் அமெரிக்க நாடான பொலிவியாவுக்கு வந்தார். 50 பேரைக் கொண்டு அரசுப்படைகளுக்கு எதிரான போரை நடத்தினார். தென் அமெரிக்காவின் புவியியல் அமைப்பைப் புரிந்து வைத்திருந்த சே குவேராவைச் சமாளிக்க முடியாமல் பொலிவியப் படைகள் திணறின. நாள்கள் செல்லச் செல்ல நிலைமை தலைகீழாக மாறியது பொலிவியப் பெரும்படை, சே குவேராவின் கெரில்லா வீரர்களை ஒவ்வொருவராகக் கொல்லத் தொடங்கியது. இறுதியாக சே குவேராவைப் பிடிப்பதற்கு அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்டது.
பல மாதத் தேடலுக்குப் பிறகு, 1967-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி, சுமார் 1800 வீரர்கள் சே குவேராவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தார்கள். சே குவேரா யுத்தத்தில் காயமடைந்திருந்தார். மறுநாள் எந்தவிதமான விசாரணையும் இன்றி பொலிவியப் படை அவரைச் சுட்டுக் கொன்றது. 9 குண்டுகள் பாய்ந்திருந்த சே குவேராவின் உடல், அடையாளம் காண முடியாத இடத்தில் புதைக்கப்பட்டது.
சே குவேரா கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சே குவேரா இறந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு, கியூபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று புரட்சியாளர்களின் அடையாளமாக சே குவேரா பார்க்கப்படுகிறார். பிடெல் காஸ்ட்ரோவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், சே குவேரா இன்றும் தேசிய நாயகனாகவே திகழ்ந்து வருகிறார்.