புகையிலை பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பதன் மூலம், அரசாங்கத்தின் வருவாயை அதிகரித்து அதனை புற்று நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் பரிந்துரைத்துள்ளன.
அந்த ஆய்வறிக்கை, புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தி விலையை உயர்த்துவதன் மூலம், அதனை பயன்படுத்தி புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
சிகரெட் ஒன்றிற்கு 0.80 டாலர் (54.66 ரூபாய்) கலால் வரியை உயர்த்துவதன் மூலம், சிகரெட் மூலம் உலகளாவிய ஆண்டு கலால் வருவாய் 47 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில், உலகலாவிய அளவில் புகையிலை கலால் வரி மூலம் சுமார் 18 லட்சம் கோடி வருவாய் அரசாங்கத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 35 சதவிகித இளைஞர்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும், நாள் ஒன்றுக்கு 5,500 இளைஞர்கள் தங்களது புகையிலை பழக்கத்தை தொடங்குவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டால் உயிரிழப்பதாகவும், 2030-ம் ஆண்டில் இந்த உயிரிழப்பு 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.