உலகம்

‘டைம் பேங்க்’.. இங்கு நேரத்தை டெபாசிட் செய்யலாம்: இது சுவிட்சர்லாந்து புதுமை!

EllusamyKarthik

வழக்கமாக சுவிட்சர்லாந்து என்றாலே இந்தியாவில் உள்ளவர்களுக்கு அங்கு இயங்கி வரும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கருப்பு பணம்தான் சட்டென நினைவுக்கு வரும். அதே போல வங்கி என்றாலே நிதி சார்ந்த சேவைகளை பெரும்பாலும் வழங்கும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் தற்போது அந்த நாட்டில் முற்றிலும் புதுமையான வகையில் ‘டைம் பேங்க்’ செயல்பட்டு வருகின்றன. 

இந்த வங்கியில் ஒருவர் சேர்ந்து பயன் பெற வேண்டுமென்றால் அவர் ஆரோக்கியமானவராகவும், இளமையானராகவும் இருக்க வேண்டும் என்பது முதல் கண்டிஷன். அதே போல இந்த வங்கியில் பணம், பொருள் என எதையும் டெபாசிட் செய்து சேமிக்க முடியாது. மாறாக பயனர்கள் தங்களது நேரத்தை மட்டுமே தங்கள் கணக்கில் டெபாசிட் செய்து சேமிக்க முடியும். 

அது எப்படி நேரத்தை டெபாசிட் செய்ய முடியும்?

அதில்தான் ட்விஸ்ட் உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் சமூக பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினரின் ஆதரவு இல்லாத அல்லது தனியாக செயல்பட முடியாத மூத்த குடிமக்களை அன்போடும், அரவணைப்போடும், அக்கறையோடும் கவனித்துக் கொள்ளும் வகையில் இளமையான தன்னார்வலர்களை இந்த டைம் வங்கியின் மூலம் பணியமர்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த டைம் பேங்க் அங்கு செயல்பட தொடங்கியுள்ளது. உத்தேசமாக 2018-இல் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இளைஞர்கள், முதியவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும். அப்படி தங்களது பொன்னான பொழுதை மூத்த குடி மக்களுடன் செலவிடும் இளைஞர்களின் நேரத்தை (ஒவ்வொரு நொடி, நிமிடம், மணி) கணக்கிடுகிறது இந்த டைம் பேங்க். அப்படி கணக்கிடப்படும் நேரத்தை சம்பந்தப்பட்ட இளைஞர்களின் டைம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நாளை அந்த இளைஞர்களுக்கு வயதாகும் போதோ அல்லது அவர்களுக்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்படும் போதோ இதே டைம் பேங்க் தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். இதுதான் டைம் பேங்க் இயங்குகின்ற கான்செப்ட். 

இந்தியாவிலும் இதே மாதிரியான டைம் வங்கியை கொண்டு வரலாம் என தேசிய மனித உரிமை ஆணைய அமர்வு சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.