உலகம்

ஆப்கனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பத்திரிகையாளர் உட்பட மூவர் சுட்டுக் கொலை

EllusamyKarthik

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பத்திரிகையாளர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

சையது மரோஃப் சாதத் என்ற பத்திரிகையாளர் தனது குடும்பத்துடன் ஜாலாலாபாத் நகர பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த சாலையில் ரிக்ஷா வண்டியில் இருந்தவர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில் பத்திரிகையாளர் சாதத், உயிரிழந்துள்ளார். அவரது மகன் மற்றும் அவர் வந்த காரை ஓட்டிய ஓட்டுனரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். 

தலிபான் அமைப்பு ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதே மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலிபான் வாகனங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. 

தலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து ஆப்கனில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அந்த நாட்டில் நிலவும் ஊடக சுதந்திரம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.