இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் சமீபத்திய திருப்பமாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் (பாலஸ்தீன ஆதரவு) நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த நிலையில், காஸாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
முன்னதாக, முதல் மூன்று பணயக்கைதிகளின் பெயர்களை கொண்ட பட்டியலை ஹமாஸ் வழங்க காலம் தாழ்த்தியதால், போர்நிறுத்தத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி முதற்கட்டமாக மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது. காஸாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களிடம், ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர், எமிலி டமரி ஆகிய பெண் பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள ரமட் கான் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அங்கு திரண்டிருந்த மக்கள், பிணைக் கைதிகளை நோக்கிக் கையசைத்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மறுபுறம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸிடம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், தற்போது இஸ்ரேலில் அமைந்துள்ள கூட்டணி அரசில் இடாமரின் ஓட்ஸ்ம் யெஹுடிட் அங்கம் வகித்துவந்த நிலையில், அவரும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் மேலும் இரு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இருப்பினும், ஹமாஸை முழுமையாக அழிக்கும் முன்பு போரை நிறுத்தினால் அவரது கட்சியும் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என அவர் எச்சரித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது, இஸ்ரேல் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.