உலகம்

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹாங்காங் வீதி

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹாங்காங் வீதி

jagadeesh

ஹாங்காங்கில் ஜனநாயக சீர்த்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகளை காக்க வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் கருப்பு உடை அணிந்து பிரமாண்ட பேரணி நடத்தினர்.

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்,‌ சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் முதலாக அங்கு போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்ததால், மேற்கத்திய கலாசாரத்துடன் ஒன்றிப் போன ஹாங்காங் மக்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வந்த நிலையில், சீனா தனது வழக்கமான அடக்குமுறையை ஏவ முடிவெடுத்தது. இதனால் ஆவேசமடைந்த ஹாங்காங் மக்கள் சீனாவுக்கு எதிராக போராட முன் வந்த நிலையில், எதிர்த்தவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு எதிராகவும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டதால் இறுதியில் ஹாங்காங் அரசு அந்த மசோதாவை திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 6 மாதங்களாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 900-க்கும் மேற்பட்ட போராட்டங்கள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. எனினும், சீனாவுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் நடைமுறையை கைவிட ஹாங்காங் அரசு தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. வான் சாய் என்ற இடத்தில் நடந்த பேரணியில், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கோரி முழக்கம் எழுப்பியதால், அப்பகுதியே அதிர்ந்தது.