உலகம்

ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிராக போராட்டம்

rajakannan

நிலக்கரி சுரங்கம் வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெற்றது. 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்தை மேற்கொள்ள இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், நிலக்கரி சுரங்கத்தால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று அந்த நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களிலும் பதாகைகளுடன் நின்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதானி குழுமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதிக அளவில் முதலீடு கிடைக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று ஆஸ்திரேலிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ‘Stop Adani’ என்ற பெயரில் தனி இயக்கம் உருவாக்கப்பட்டு இதுவரை 45 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் திரண்டு அதானிக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கைகளில் ‘STOP ADANI’ என்ற பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.